பிரதமர் லீ: வாக்காளர்களுக்கு மசெக விசுவாசமாக இருக்கும்

பிரதமர் லீ: வாக்காளர்களுக்கு மசெக விசுவாசமாக இருக்கும்

2 mins read
596c2934-4940-436c-aa69-0347c165b5a1
பிரதமரும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான லீ சியன் லூங். படம்: மசெக -

பிரதமர் லீ சியன் லூங் 1984ஆம் ஆண்டில் தம் முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்றபோது, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டுவிட்டர் ஆகியவை இல்லை. வாக்காளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது 'முகத்துக்கு முகம் நேரான' முறையில் நடந்ததாக மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு லீ நேற்று முன்தினம் நிகழ்ந்த நேரடி ஃபேஸ்புக் பிர சாரத்தின்போது கூறினார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தம் டெக் கீ வட்டாரத்துடனும் அதன் தொண்டூழியர்களுடன் இருந்து வருவதாகப் பகிர்ந்துகொண்டார். அனைவரும் ஒன்றாக ஒரு சமூகத்தையும் இல்லத்தையும் உருவாக்கியுள்ளதாகவும் 68 வயது திரு லீ சொன்னார்.

மசெகவின் ஒளிப்பதிவுக் கூடத்தில் பிரதமர் லீயுடன் சக அங் மோ கியோ குழுத் தொகுதி வேட்பாளர் மற்றும் மெய்நிகர் பிரசார நிகழ்ச்சியின் தொகுப்பாளர் டேரல் டேவிட் (49) பங்கேற்றார். அணியின் திரு கான் தியாம் போ, புதுமுகங்களான இங் லிங் லிங் (48) மற்றும் நாடியா சம்டின் (30) ஆகியோரும் காணொளி சந்திப்பில் கலந்துகொண்டனர். 7,000க்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்ட மெய்நிகர் பிரசாரத்தில், ஐந்து உறுப்பினர் மசெக அணியினர் தங்களின் திட்டங்களைப் பற்றி பேசினர்.

குறிப்பாக டெக் கீ, செங்காங் சவுத், அங் மோ கியோ-ஹவ்காங், செங் சான்-சிலேத்தார் மற்றும் ஜாலான் காயு பகுதிகளை உள்ளடக்கிய அங் மோ கியோவின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் வெகுவாகப் பேசப்பட்டது. 1984ஆம் ஆண்டை அடுத்து ஏழு தேர்தல்கள் நடந்துள்ளன. வாக்காளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதையும் உறவை வளர்த்துக்கொள்வதையும் ஆளும் கட்சி முக்கியமாகக் கருதுவதாக வலியுறுத்திக் கூறினார் திரு லீ.

தம் தந்தை முன்பு கூறியிருந்ததை மேற்கோள் காட்டிய திரு லீ, வாக்காளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசுவாசம் மிக்க ஓர் உறவை ஏற்படுத்தி அதை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.