மீண்டும் முடங்கியது மெல்பர்ன் நகரம்

2 mins read
0d0933ff-131d-4d71-af9c-630511cf2962
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் முடக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்பதற்காக கொண்டு வரப்பட்ட உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும் மக்கள். படம்: இபிஏ -

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மெல்பர்னில் கிருமித்தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால், அங்கு ஆறு வார முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மெல்பர்ன் நகரில் ஒன்பது குடியிருப்புகள் முற்றிலும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், 24 மணி நேரத்தில் மெல்பர்னில் 191 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து 8ஆம் தேதி இரவு முதல் அங்கு முடக்க உத்தரவு நடப்புக்கு வருவதாகவும் விக்டோரியா மாநிலத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று சொன்னார்.

"கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று எங்களால் பாசாங்கு செய்ய முடியாது. இந்த முடக்க உத்தரவு ஆறு வாரங்களுக்கு நீடிக்கும்," என்றும் அவர் சொன்னார்.

"பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் இதைத் தவிர வேறு வழியில்லை," என்றார் அவர்.

இந்த தடை உத்தரவின் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேற முடியாது.

மாணவர்கள் அனைவரும் இணைய வழி வகுப்புகளைத் தொடர அரசு அறிவுறுத்தியுள்ளது.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகிறது.

இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கும் விக்டோரியா மாநிலத்திற்கும் இடையிலான எல்லை நேற்று நள்ளிரவு முதல் மூடப்படவிருந்தது.

இரு மாநிலங்களுக்கும் இடையிலான 55 எல்லைகளில் சுமார் 650 போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று நியூ சவுத் வேல்ஸ் போலிஸ் அமைச்சர் மிக் ஃபுல்லர் சொன்னார்.

அனுமதியில்லாமல் எல்லைகளைக் கடக்க முயல்பவர்களுக்கு 11,000 ஆஸ்திரேலிய டாலர் (S$10,650) அபராதமோ அல்லது ஆறு மாத சிறைத் தண்டனையோ விதிக்கப்படக்கூடும் என்றும் அவர் சொன்னார்.