வடகொரியா: மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தென்கொரியா நிறுத்த வேண்டும்

சோல்: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் தென்கொரியா தலையிட வேண்டாம் என்று வடகொரியா வலியுறுத்தியுள்ளது.

வடகொரிய அணுவாயுத களைவு தொடர்பான பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியாக அமெரிக்க தூதர் விரைவில் தென்கொரியா செல்லவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பியோங்யாங் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விவகாரங்களுக்கான பியோங்யாங் அதிகாரி குவான் ஜோங் கன், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மீண்டும் சந்திக்கவுள்ளது குறித்து வதந்தியை நிராகரித்ததோடு, முந்திய வடகொரிய அறிக்கையை தென்கொரியா தவறாகப் புரிந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தென்கொரியா நிறுத்திக் கொள்வதற்கான நேரம் இது.

“ஆனால் அதன் கெட்ட பழக்கத்திற்கு சிகிச்சையோ அல்லது மருந்துகளோ இல்லை என்று தோன்றுகிறது,” என்று வடகொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்ட அறிக்கையில் குவான் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், “வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவுடன் மீண்டும் நேருக்கு நேர் அமர எங்களுக்கு விருப்பமில்லை,” என்றார்.

வடகொரிய, அமெரிக்கத் தலைவர்கள் இருவரும் சென்ற 2018ல் சிங்கப்பூரிலும் 2019ல் வியட்னாமிலும் அணுவாயுத களைவு தொடர்பாக சந்தித்தனர்.