உலக அளவில் கொவிட்-19 பாதிப்பு 12 மில்லியனைக் கடந்தது; கால்வாசி சம்பவங்கள் அமெரிக்காவில்

உலக அளவில் கொவிட்-19 பாதிப்பு 12 மில்லியனைக் கடந்தது; கால்வாசி சம்பவங்கள் அமெரிக்காவில்

2 mins read
8d4c5603-b5d7-43da-a84c-eb349e823221
அமெரிக்காவில் கிருமிப் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கும் நிலை யில், அங்கு ஒரே நாளில் 60,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்துள்ளது; 547,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உலகில் பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கையில் சுமார் கால்வாசி அமெரிக்காவில் பதிவானவை.

அமெரிக்காவில் கிருமிப் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கும் நிலை யில், அங்கு ஒரே நாளில் 60,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும் என்கிறது ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம்.

கிருமிப் பரவல் இருந்தபோதும் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கிய சில அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர்.

டெக்சாஸில் 9,500 பேரும் கலிஃபோர்னியாவில் 8,500 பேரும் ஒரே நாளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது அந்த மாநிலங்களின் அன்றாட பாதிப்பின் ஆக அதிக எண்ணிக்கையாகும்.

இந்த நகரங்கள் தவிர தற்போது டென்னிசி, மேற்கு வெர்ஜீனியா மற்றும் உட்டா ஆகிய மாநிலங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 42ல் கிருமிப் பரவல் அதிகரித்து வருவதாக ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வு கூறுகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர். இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கிருமித்தொற்று காரணமாக இதுவரை 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 132,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இதற்கிடையே, ஒக்லஹோமாவின் துல்சாவில் கடந்த மாதம் அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்ட பிரச்சார பேரணியே, அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அந்நகரத்தின் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்