செங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி

செங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி

2 mins read
bda820dd-232e-48e0-b3b8-c0597bfde23a
பாட்டாளிக் கட்சி ஆதரவாளர்கள் பாரம்பரியமாகக் கூடும் ஹவ்காங் அவென்யூ 5, புளோக் 322ல் உள்ள காப்பிக் கடையில் நேற்றிரவு கூடிய அக்கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே வெற்றி முழக்கங்களைத் தொடங்கினர். எண்ணிக்கையில் பாட்டாளிக் கட்சி வெற்றி பெறும் எனத் தெரிய வந்தது முதல் அவர்களின் உற்சாகம் கரைபுரண்டது. கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கிடையிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாட்டுப் பாடி, வாத்தியங்கள் இசைத்தனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதிய குழுத் தொகுதியான செங்காங்கையும் பாட்டாளிக் கட்சி பிடித்து வரலாறு படைத்திருக்கிறது. 60,136 (52.13%) வாக்குகளுடன் செங்காங்கில் வெற்றி பெற்று இரண்டாவது குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சி கைப்பற்றியது.

இதன்மூலம் இரு குழுத்தொகுதிகள், ஒரு தனித் தொகுதியுடன் தன் பலத்தை பாட்டாளிக் கட்சி மேலும் வலுப்படுத்திக்கொண்டுள்ளது.

செங்காங் குழுத் தொகுதியில் திரு ஜேமஸ் லிம், திரு லுயிஸ் சுவா, திருவாட்டி ரயீசா கான், திரு ஹி டிங்ரு ஆகியோர் அடங்கிய குழுவை பாட்டாளிக் கட்சி நிறுத்தியது.

பாட்டாளிக் கட்சியின் வெற்றிக்கு ஜேமஸ் லிம் ஒரு முக்கிய காரணம். இந்தத் தேர்தலில் அதிகம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது ஜேமசின் பேச்சுக்களாகத்தான் இருக்கும். அவரது பேச்சாற்றலும் பாங்கும் அறிவாற்றலும் பலராலும் புகழப்பட்டு வருகின்றன.

என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தலைமையில், திரு லாம் பின் மின், திரு அம்ரின் அமின், திரு ரேமண்ட் லாய் ஆகியோர் அடங்கிய மக்கள் செயல் கட்சிக் (மசெக) குழு பெற்ற வாக்குகள் 55,214 (47.87%). 4.27% வாக்கு வித்தியாசத்தில் மசெக இந்த குழுத் தொகுதியை இழந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட, நான்கு உறுப்பினர் குழுத்தொகுதியான செங்காங்கில் மொத்தம் 120,166 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்று இருந்தனர்.

பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியுடன், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி மற்றும் செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியின் சில பகுதிகளையும் இணைத்து செங்காங் குழுத்தொகுதி உருவாக்கப்பட்டது.

2015 பொதுத் தேர்தலில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் மசெக 72.9% வாக்குகளைப் பெற்று, வாகை சூடியது. அதேபோல, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியிலும் மசெகவின் லாம் பின் மின் 62.1% வாக்குகளைப் பெற்று, எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இருந்தார்.

அந்தத் தேர்தலில், பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியில் மசெக சார்பில் களமிறக்கப்பட்ட சார்ல்ஸ் சோங் 51.8% வாக்குகளைப் பெற்று, பாட்டாளிக் கட்சியின் லீ லி லியனை வென்றார்.

குறிப்புச் சொற்கள்