தேர்தல் கொத்து - 12-7-2020

தேர்தல் கொத்து - 12-7-2020

2 mins read
e8c47f74-85dd-4481-980d-e54117a3f861
படம்: எஸ்டி -

95.63% வாக்குப்பதிவு

பதிவுபெற்ற வாக்காளர்களில் 95.63 விழுக்காட்டினர், அதாவது 2,535,565 பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்ததாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது. அதில் 45,722 செல்லாத வாக்குகளும் அடங்கும். மொத்தம் 2,651,435 பேர் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

புதிய தொகுதியில் புதுமுகம் வெற்றி

புதிய தனித்தொகுதியான இயோ சூ காங்கில் மசெக களமிறக்கிய புதுமுக வேட்பாளரான திரு யிப் ஹோன் வெங், 43, வெற்றி பெற்றார். திரு யிப் 60.83% வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி திருவாட்டி கெய்லா லோவை நிறுத்தியது. அவருக்கும் இதுவே முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. அங் மோ குழுத்தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, இயோ சூ காங் தனித்தொகுதி உருவாக்கப்பட்டது.

பாட்டாளிக் கட்சி அணிக்குப் பாராட்டு

தொடர்ந்து மூன்றாவது தேர்தலாக அல்ஜுனிட் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சிக்கு அங்கு போட்டியிட்ட மசெக வேட்பாளர்களில் ஒருவரான திரு விக்டர் லாய் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். திரு லாய் அல்ஜுனிட்டில் களமிறங்கியது இது இரண்டாம் முறை. கடந்த தேர்தலில் அங்கு கடும் போட்டி நிலவிய நிலையில், இம்முறை மசெகவால் 40.07% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில், "இது ஜன நாயகச் செயல்முறை. மக்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். இப்போதைய கொவிட்-19 உலகில் முன்னே உள்ள சவால்களை வெற்றி கொள்ள நாம் அனைவரும் ஒரே மக்களாக இணைந்து செயலாற்றிய வேண்டிய நேரம் இது," என்றும் திரு லாய் வலியுறுத்தியுள்ளார்.

சக மசெக வேட்பாளரான திரு ஷாம்சுல் கமார், அல்ஜுனிட்டில் மீண்டும் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி வேட்பாளர் ஃபைசால் மனாப்புக்கு ஃபேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3வது சவாலையும் மசெக முறியடித்தது

கடந்த மூன்று தேர்தல்களாக பீஷான் - தோ பாயோ குழுத் தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற சிங்கப்பூர் மக்கள் கட்சியை மசெக தோற்கடித்து சாதித்துள்ளது. தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தலைமையிலான மசெக அணி, இம்முறை 67.26% வாக்குகளுடன் வெற்றியைச் சுவைத்தது.