மலேசிய நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபித்ததன் மூலம் கடந்த சில மாதங்களாக நிலவிய நிச்சயமற்ற நிலைக்கு பிரதமர் முகைதீன் யாசின் முற்றுப்புள்ளி வைத்தார்.நாடாளுமன்ற நாயகர் அரிஃப் முகம்மது யூசோஃப்பை பதவிநீக்கம் செய்ய பிரதமர் முகைதீன் முன்மொழிந்த தீர்மானம் இரண்டு வாக்கு வித்தியாசத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பெர்சத்து கட்சியின் தலைவரான திரு முகைதீன், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி மலேசியப் பிரதமராக பதவி ஏற்றார். ஆனால், முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகம்மது, மொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்னமும் தமக்கு 115 பேரின் ஆதரவு இருப்பதாகக் கூறி வந்தார்.
இந்நிலையில், மன்ற நாயகரை மாற்றுவது குறித்த தீர்மானம் தொடர்பாக நேற்று நடந்த வாக்கெடுப்பு 111-109 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு எம்.பி. மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. துணை நாயகர் ரஷீத் ஹஸ்னோன் வாக்கெடுப்பை நடத்தியதால் அவர் வாக்களிக்கவில்லை. இதையடுத்து, திரு முகைதீனின் 'பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணி, தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசார் அஸிஸான் ஹாருணை நாடாளுமன்றத்தின் புதிய நாயகராக நியமிக்க முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
"நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய தவற்றைச் செய்யாதீர்கள். புதிய வேட்பாளர் இருக்கிறார் என்பது அறிவுக்கு ஒவ்வாத காரணம். தனது கடமைகளைச் சரிவர நிறைவேற்றிய ஒருவரை மன்ற நாயகர் பதவியில் இருந்து நீக்குவதற்கு உறுதியான காரணம் இருந்தால், அதை நாங்கள் பரிசீலிப்போம்," என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் முன்னதாக நடந்த நாடாளுமன்ற விவாதத்தின்போது கூறினார். அதேபோல, டாக்டர் மகாதீரும் மன்ற நாயகரை மாற்றும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
"இன்னொரு வேட்பாளர் இருக்கிறார் என்பதற்காக மன்ற நாயகரைப் பிரதமர் மாற்ற முடியும் என்று அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது நாடாளுமன்ற நிலையாணைகளிலோ நான் படித்ததில்லை," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.அத்துடன், "பிரதமர் பதவிக்கு என்னிடமும் இன்னொரு வேட்பாளர் உண்டு," என்றும் அவர் வேடிக்கையாகச் சொன்னார்.
தான் சொல்வதை எல்லாம் செய்யக்கூடிய மன்ற நாயகர் வேண்டும் என அரசு விரும்புகிறது என்றும் ஆனால் மன்ற நாயகரின் பணி அதுவல்ல என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணி எம்.பி.யான திரு அஸீஸ் ரஹீம், டாக்டர் மகாதீருக்குப் பதிலடி கொடுத்தார். தாம் பிரதமராக இருந்தபோது, எந்தத் தவற்றையும் இழைக்கவில்லை என்றபோதும் நீதி, காவல், ஊழல் தடுப்பு ஆகிய துறைகளின் தலைவர்களை டாக்டர் மகாதீர் மாற்றியதாக திரு அஸீஸ் சாடினார்.
சட்டத்திற்கு உட்பட்டே மன்ற நாயகரை மாற்றும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் மன்றம் தீர்மானித்தால் புதிய நாயகரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் சட்ட அமைச்சர் தகியுதீன் ஹசன் விளக்கமளித்தார். டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் சட்ட, குடிமைப் பணித் துறைகளில் உயர்நிலையில் இருக்கும் வழக்கறிஞர்களை விட்டுவிட்டு, தனியார் துறை வழக்கறிஞர்களை தலைமைச் சட்ட அதிகாரியாகவும் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதைஆளும் கூட்டணியைச் சேர்ந்த வேறு சில எம்.பி.க்கள் திரும்ப திரும்பச் சுட்டிக்காட்டினர்.
இதனிடையே, இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தின் புதிய நாயகராக தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசார் அஸிஸான் ஹாருண் தேர்வு செய்யப்பட்டார். துணை நாயகர் ரஷீத் ஹஸ்னோன் திரு அசாரை மன்றத்தில் அறிமுகம் செய்ய, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பெரும் எதிர்ப்புக்கு இடையே திரு அசார் மன்ற நாயகராக பதவி ஏற்றுக்கொண்டார்.அந்தப் பதவியை ஏற்பதில் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார் திரு அசார்.
பிரதமர் முகைதீன் மீது டாக்டர் மகாதீர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை முடிவுசெய்ய தமக்கு அதிகாரமில்லை என்றும் அதுகுறித்து மன்ற நாயகர் அலுவலகமே முடிவுசெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

