சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020ல் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லீ சியன் லூங்கை நேற்று முன்தினம் தொலைபேசி வழி அழைத்து வாழ்த்துக் கூறியுள்ளார் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின்.
அந்த உரையாடலின்போது இரு தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கிடையே நிலவும் வலுவான, ஆக்கபூர்வமான உறவை தொடர்ந்து கட்டிக்காக்க உறுதி பூண்டனர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான பொதுவான சவால்களை இரு அரசாங்கங்களும் இணைந்து சமாளிப்பதில் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் இரு பிரதமர்களும் தெரிவித்தனர்.
"எல்லை தாண்டிய இணைப்புத் திட்டங்கள், மக்கள் நடமாட்டம் உட்பட இருதரப்பு உறவில் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை இரு தலைவர்களும் வரவேற்றனர்," என்றும் அமைச்சின் அறிக்கை கூறியது.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று, இரு பிரதமர்களும் சிங்கப்பூருக்குகம் மலேசியாவுக்கும் இடையிலான பயணம் படிப்படியாகத் திறக்கப்படுவது பற்றி கலந்துரையாடினர்.
அந்த உரையாடலின்போது, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பாதுகாப்பான பயணத் தடம் குறித்த பரஸ்பர இணக்கம் குறித்தும் திரு லீயும் திரு முகைதீனும் விவாதித்தனர் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

