உலக சுகாதார நிறுவன பிரமுகர் கருத்து: கொவிட்-19 காற்று மூலம் அவ்வளவாக பரவாது

உலக சுகாதார நிறுவன பிரமுகர் கருத்து: கொவிட்-19 காற்று மூலம் அவ்வளவாக பரவாது

1 mins read
d4c57780-fc1f-4df0-850b-2139397ab19c
சிங்கப்பூர் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் உள்ள தேசிய பொதுச் சுகாதார சோதனைக்கூடத்தில் சுவாசக் கிருமிகளை நிபுணர் பரிசோதிக்கிறார். கொவிட்-19 கிருமி இயற்கையிலேயே காற்று மூலம் பரவுமா, காற்று மூலம் பரவி பலரையும் தொற்றுமா என்பது பற்றி ஆராய்ந்து வருவதாக இந்த நிலையம் குறிப்பிட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமி காற்று மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சென்ற வாரம் தெரிவித்தது. ஆனால் கொரோனா கிருமி காற்று மூலம் அவ்வளவாகப் பரவாது என்று அந்த நிறுவனத்தின் பிரமுகர் ஒருவர் கூறினார்.

பேராசிரியர் டேல் ஃபிஷர் என்ற அந்தப் பிரமுகர், உலக சுகாதார நிறுவனத்தின் கிருமித்தொற்று, எச்சரிக்கை, செயல் கட்டமைப்பு என்ற அமைப்புக்குத் தலைவர்.

கொவிட்-19 கிருமி அணுக்கத் தொடர்பு, எச்சில், சளி திவலை மூலம்தான் பெரும்பாலும் பரவும் என்று இந்தக் கட்டமைப்பு நம்புவ தாக பேராசிரியர் தெரிவித்தார்.

இவர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தொற்றுநோய்த் துறை மூத்த ஆலோசனையாளராகவும் உள்ளார்.

பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறுவதை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சா சுவீ ஹோக் பொது மருத்துவத் துறையில் தொற்று நோய்ச் செயல்திட்டத் தலைவராக பணியாற்றும் இணைப் பேராசிரியர் ஸு லி யாங் ஒப்புக்கொண்டார்.

கொவிட்-19 பெரும்பாலும் அணுக்கத் தொடர்பு, எச்சில், சளி திவலை மூலம்தான் பரவும் என்றாலும் காற்றோட்டம் இல்லாத, நெரிசலான அறைகள் போன்ற சூழலில் காற்று மூலம் கிருமி பரவக்கூடும் என்றார் இவர்.

வழக்கமான கிருமிகள் காற்றில் அதிக நேரம் உயிரோடு இருந்து அங்கும் இங்கும் பரவி பலரையும் தொற்றும். ஆனால் கொவிட்-19 கிருமி வழக்கமான கிருமிகளைப் போல் பரவாது என்றே இந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.