இத்தாலியை மிஞ்சிய மெக்சிகோ; 35,000 பேர் கிருமிக்குப் பலி

இத்தாலியை மிஞ்சிய மெக்சிகோ; 35,000 பேர் கிருமிக்குப் பலி

2 mins read
f94c31e0-d819-4d31-835e-1c31864b3950
மெக்சிகோவில் வர்த்தகம் மீண்டும் செயல்படத் தொடங்கியுளளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் பொருளியலை மீண்டும் திறப்பதில் மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் ஆர்வம் காட்டுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

மெக்சிகோ: 'கொவிட்-19' மரண எண்ணிக்கையில் இத்தாலியையும் மெக்சிகோ மிஞ்சிவிட்டது. இதனால் உலக நாடுகளில் கிருமித் தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மெக்சிகோ உருவெடுத்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்றுக்கு மேலும் 276 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,006ஆக ஆனது.

புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் 4,482க்கு அதிகரித்து மொத்தம் 299,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக மெக்சிகோவில் கிருமித்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் மிஞ்சிவிட்டது.

ஆனால் மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபெஸ் ஒப்ரடார், கிருமிப்பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் பொருளியலை மீண்டும் திறப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் கொரோனா கிருமிப் பரவலில் அவர் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சுகாதாரத் துறை துணை அமைச்சர் ஹுகோ லோபெஸ்-கேடெல், "சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு, அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவை காரணமாக கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது," என்றார்.

இதர லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவே மெக்சிகோவில் உள்ள மக்களும் கிருமித்தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடியவர்கள். காரணம், நெரிசலான வாழ்விடங்களில் வசிக்கும் அவர்கள் அன்றாட தேவையைப் பூர்த்தி செய்ய வேலை செய்தாக வேண்டும். இதனால் பாதுகாப்பு இடைவெளி போன்ற கொவிட்-19 பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமலாக்குவது அரசாங்கத்துக்கு சவாலாக உள்ளது.

இவ்வாரம் முழுவதும் நாளுக்கு நாள் கிருமித்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 7,000 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருந்தாலும் முன்பு போல கொரோனா காய்ச்சல் பரவவில்லை என்று அமைச்சர் லோபெஸ்-கேடெல் கூறியுள்ளார்.