அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 60,000 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
85fcb17d-1172-4d0b-9013-a695f5fdc7b0
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மயாமி கடற்கரைக்கு அருகே முகக்கவசம் அணிந்தவாறு பொழுதைக்ககழிக்கும் மக்கள். அமெரிக்காவில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் சில மாநில ஆளுநர்கள் பொருளியலைத் திறந்துவிடும் திட்டத்தையும் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். தற்போது முகக்கவசம் அணியாதவர்களும் அணியத் தொடங்கியுள்ளனர். படம்: ஏஎப்பி -

வாஷிங்டன்: கொரோனா கிருமிப் பரவலின் வலையில் சிக்கி திக்குமுக்காடி வரும் அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மேலும் 60,000 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59,747 பேர் பாதிக்கப்பட்டதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் அண்மைய வாரங்களாக கிருமித்தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று புதிதாக 66,528 பேருக்கு கிருமித் தொற்றியது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

புதிய சம்பவங்களுடன் சேர்த்து நாடு முழுவதும் மொத்தம் 3,301,820 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று நேற்று காலை புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்ட பால்டிமோரைத் தளமாகக்கொண்டு செயல்படும் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

அமெரிக்காவில் கிருமித்தொற்றுக்கு இதுவரை 135,171 பேர் பலியாகிவிட்டனர்.

புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் சில மாநில ஆளுநர்கள் பொருளியலைத் திறந்துவிடும் திட்டத்தையும் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். தற்போது முகக்கவசம் அணியாதவர்களும் அணியத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் முழுமையாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது.

முகக்கவசம் அணியாமல் பிடிவாதமாக இருந்த அதிபர் டிரம்ப்பும் முதல் முறையாக ஞாயிறு அன்று பொது இடத்தில் முகக்கவசம் அணிந்து அதிகாரிகளுடன் நடந்து சென்றார்.