57 கப்பல் சிப்பந்திகளுக்கு கொவிட்-19 கிருமி தொற்றிய மர்மம்

1 mins read
86108baf-6d18-4701-9792-da1a4cc1b558
அர்ஜென்டினாவின் உ‌ஷுவலா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த மீன்பிடிக் கப்பலில் பணிபுரியும் 57 பணியாளர்களுக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

புவெனஸ் ஐரிஸ்: அர்ஜென்டினாவிலுள்ள ஒரு துறைமுகத்திலிருந்து கிளம்பும்போது கப்பல் சிப்பந்திகள் யாருக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

அத்துடன் கப்பல் கிளம்புவதற்கு முன், சிப்பந்திகள் 14 நாட்களுக்கு ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் கடலில் 35 நாட்கள் இருந்ததை அடுத்து 61 பேரில் 57 கப்பல் சிப்பந்திகளுக்குத் திடீரென கிருமி பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எங்கும் நிறுத்தாமல் சென்ற கப்பலில் இருந்தவர்களுக்கு எப்படி கிருமி தொற்றியிருக்கும் என்பதைக் கண்டறியும் பணியில் மருத்துவ நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.

கடல் பயணத்தில் இருந்தபோது சிலரிடம் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து, கப்பல் கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

அர்ஜென்டினாவில் 103,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.