'முகக்கவசம் அணிந்தால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம்'

1 mins read
95423b3e-51de-4852-8a65-363c2ae6e52f
அமெரிக்க தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு நிலையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால், நான்கு முதல் எட்டு வாரங்களுக்குள் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அமெரிக்க தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு நிலையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார். மருத்துவ சஞ்சிகை ஒன்றுக்கு நேற்று முன்தினம் பேட்டியளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முகக்கவசம் அணிவது பொதுச் சுகாதார பிரச்சினையுடன் தொடர்புடையது என்ற அவர், அது அரசியலாக்கப்பட்டது தமக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.

"அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் இப்போது முகக்கவசம் அணிவதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் திரு ரெட்ஃபீல்ட்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே உள்ள ராணுவ மருத்துவத் தளத்திற்கு கடந்த வாரம் வருகையளித்தார் அதிபர் டோனல்ட் டிரம்ப். அப்போது அவர் முகக்கவசம் அணிந்திருந்தார். அதற்கு முன்னதாக அவர் கலந்துகொண்ட எந்தவொரு பொது நிகழ்விலும் அவர் முகக்கவசம் அணியவில்லை.