தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறுதிக் கட்டத்தில் நோய் தடுப்பு மருந்து பரிசோதனை

1 mins read
6d402168-d5fc-44e5-bc4d-a37f6fde2171
அமெரிக்காவின் சான் டியேகோ சோதனை கூடத்தில் ஆர்க்டுரஸ் தியரபியுடிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வு உதவியாளர் மரியோன் ஹோங், கொவிட்-19 கொடுந்தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான மோடர்னா, கொவிட்-19 நோய்த் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்திப் பார்க்கும் பரிசோதனையில் தான் இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது. இம்மாதம் 27ஆம் தேதி அந்தப் பரிசோதனை இறுதிக் கட்டத்தை எட்டவிருப்பதாக அது கூறியது.

அமெரிக்காவில் நடத்தப்படும் இந்த மூன்றாம் கட்ட பரிசோதனையில் 30,000 பேர் பங்கேற்கவுள்ளனர்.

Sars-CoV-2 எனும் கிருமித்தொற்றை இந்த மருந்தால் தடுக்க முடியுமா என்பது பற்றி தெரிந்துகொள்ள இந்தப் பரிசோதனை உதவும். மனிதர்களிடம் கிருமி தொற்றினாலும் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்படுவதை நோய்த் தடுப்பு மருந்து தடுக்குமா என்பது பற்றியும் பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடியும்.

அறிகுறிகள் தென்பட்டாலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க இந்த மருந்து உதவினால்கூட அது வெற்றியாகக் கருதப்படலாம். நோய்த் தடுப்பு மருந்தின் இறுதிக் கட்ட பரிசோதனை அக்டோபர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கிருமிக்கு எதிராக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் உலகளாவிய போட்டியில் மோடர்னா நிறுவனம் முன்னணி வகிப்பதாக கூறப்படுகிறது.