கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடையே மரண எண்ணிக்கை, தொடக்கத்தில் இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்திருப்பதாக பகுப்பாய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
கொவிட்-19 தொடர்பான 24 ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக பகுப்பாய்வு முடிவுகள் அனஸ்தீசியா என்ற சஞ்சிகையில் நேற்று வெளியாகின.
இங்கிலாந்தின் ராயல் யுனைட்டெட் மருத்துவமனைகளைச் சேர்ந்த பேராசிரியர் டிம் குக்கின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் விகிதம் முன்பு 60 விழுக்காடாக இருந்தது. மே மாத இறுதியில் அது 42 விழுக்காடாகக் குறைந்தது.
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த விகிதத்தில் பெரிய மாற்றமில்லை.
உலக அளவில் வெளியிடப்பட்ட மருந்தக ஆய்வறிக்கைகள் இந்த முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவலின் ஆரம்பகாலத்தில், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் விகிதம் தற்போது சுமார் 40 விழுக்காடாக இருந்தாலும், அது சுவாசப் பிரச்சினைகளை உருவாக்கும் மற்ற கிருமித்தொற்றுகளால் ஏற்படும் மரண விகிதமான 22 விழுக்காட்டைவிட அதிகம்.

