சிட்னி: ஆஸ்திரேலியாவில் இரண்டாவது ஆகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் நேற்று மேலும் 317 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிருமிப் பரவத் தொடங்கியது முதல் விக்டோரியாவில் ஒரே நாளில் இத்தனை பேரை கிருமி தொற்றியிருப்பது இதுவே முதன்முறை.
ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமி பரவும் மையப் பகுதியாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. இம்மாதம் மட்டும் அங்கு கிட்டத்தட்ட 2,800 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 317 சம்பவங்களில் 28 சம்பவங்கள் முந்தைய கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவை என்று விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆன்ட்ரூஸ் தெரிவித்தார். எஞ்சிய 289 சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்டோரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இரு ஆடவர்கள் உயிரிழந்துவிட்டதாக ஆன்ட்ரூஸ் கூறினார். அவர்கள் இருவரும் 80 வயது மதிக்கத்தக்கவர்கள். அவர்களையும் சேர்த்து, ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 113ஆக உள்ளது.
இதற்கிடையே, விக்டோரியாவின் அண்டை மாநிலமான நியூ சவுத் வேல்சில் நேற்று புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
சவுத் ஆஸ்திரேலியா மாநிலத்தில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்று நிலவரம் "மிகுந்த கவலைக்குரியது" என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் வர்ணித்தார்.
எனினும், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெற்றி கண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

