அமெரிக்கா: தொழிலதிபர்கள், பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஊடுருவல்

2 mins read
cd4d2163-ff53-4030-8c73-6e368dfb1ed8
ஊடுருவப்பட்ட கணக்குகளில் வெளியிடப்பட்ட பதிவுகள் காரணமாக சிறிது நேரத்திலேயே 100,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. படம்: ஏஎப்பி -

வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகிய பலரின் டுவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டன. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாஃப் இணை நிறுவனர் பில் கேட்ஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகள் ஊடுருவலுக்கு இலக்காகின.

இதுபோக, ஊபர், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டன. 'பிட்காயின் ஸ்கேம்' என்று அழைக்கப்படும் இந்த மோசடி சம்பவத்தில் ஊடுருவப்பட்ட டுவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் மின்னிலக்க நாணயங்களை நன்கொடை வழங்குமாறு கோரப்பட்டது.

"எல்லாரும் என்னை பணம் வழங்கச் சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் 1,000 டாலர் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர் திரும்பி அனுப்புகிறேன்," என பில் கேட்ஸ் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பதிவுகள் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவை அழிக்கப்பட்டுவிட்டன. இதற்குப் பதில் நடவடிக்கையாக 'வெரிஃபைட்' கணக்குகள் எனப்படும் நீல நிற புட்குறி கொண்ட கணக்குகள் பலவற்றை டுவிட் செய்யவிடாமல் நிறுத்தியது டுவிட்டர் நிறுவனம்.

மறைச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஊடுருவப்பட்ட பல டுவிட்டர் கணக்குகளால் தற்போது டுவிட் செய்ய முடியும் என்று தெரிவித்த டுவிட்டர் நிறுவனம், இந்தச் சம்பவம் தொடர்பாக தான் விசாரணை நடத்தி வருவதாக கூறியது.

ஊடுருவல் சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் அதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த டுவிட்டர் நிறுவனத் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி உறுதி பூண்டார்.

"டுவிட்டரில் எங்களுக்கு இன்றைய தினம் மிகவும் கடினமான ஒன்று. இச்சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்," என்று அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் கூறினார்.

ஊடுருவப்பட்ட கணக்குகளில் வெளியிடப்பட்ட பதிவுகள் காரணமாக சிறிது நேரத்திலேயே 100,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் செல்வாக்குமிகுந்த நபர்களின் டுவிட்டர் கணக்குகளை மில்லியன் கணக்கான பயனாளர்கள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.