அமெரிக்காவில் வீட்டுப் பாடம் செய்யாத மாணவி தடுத்துவைப்பு

அமெரிக்காவில் வீட்டுப் பாடம் செய்யாத மாணவி தடுத்துவைப்பு

2 mins read
fd2399b2-c22d-405d-b9e8-bd1421155f52
டெட்ராய்ட் புறநகரில் உள்ள பள்ளிக்கு வெளியே மாணவியை விடுவிக்கக் கோரி நேற்று முன்தினமும் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: அமெரிக்காவில் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த 15 வயது மாணவி, வீட்டுப்பாடங்களை செய்யாததால் இளம் குற்றவாளிகளுக்கான நிலையத்தில் தடுத்துவைக்க மிச்சிகன் மாநில நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் அவரது சக மாணவர்கள் கொதித்தெழுந்துள்ளர்.

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அமெரிக்காவில் பல்வேறு பள்ளிகளில் இணையம் வழியாகப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆப்பிரிக்க அமெரிக்க மாணவியான கிரேஸ், இணைய வகுப்பில் வழங்கப்பட்ட பாடங்களை செய்து முடிக்கவில்லை. இதனால் மே மாதம் மத்தியிலிருந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் இருந்தால் வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தமது மகளுக்கு 'ஏடிஎச்டி' எனும் கவனக்குறைவு மற்றும் விளைவுகள் அறியாமல் அதிவேகத்தில் செயல்படக்கூடிய குறைபாடு உள்ளது என்று சிறுமியின் தாயார் தெரி வித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருட்டு மற்றும் தாக்கிய குற்றத்திற்காக ஏப்ரல் மாதம் மத்தியிலிருந்து நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் கிரேஸ் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டுப்பாடங்களை செய்யாதது மற்றொரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே கிரேஸ் தடுத்து வைக்கப்பட்டது பற்றி அறிந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் அவரை விடுவிக்கக் கோரி டெட்ராய்ட் புறநகரில் உள்ள பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிரேஸின் விவகாரத்தை மறுபரிசீலனை செய்வதாக மிச்சிகன் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மற்றொரு நிலவரத்தில் அமெரிக்காவில் கட்டுக்கடங்காத கிருமிப்பரவலால் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 77,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 3.53 மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 138,000 பேர் கிருமித்தொற்றுக்கு பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் முகக் கவசம் அணிவதில் மாநிலங்களுக்கு இடையே முரண்பாடு நிலவுகிறது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கொலோராடோ ஆளுநர், குடியரசுக்கட்சியின் அர்கான்சாஸ் ஆளுநர் உட்பட 50 மாநிலங்களில் 26 மாநிலங்களில் ஆளுநர்கள் கட்டாயமாக முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் ஜார்ஜியா மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் ஆளுநரான பிரையன் கெம்ப், முகக்கவசம் அணியும் விதிமுறையை தளர்த்தியிருக்கிறார். இருந்தாலும் குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணிவதை ஊக்கமூட்டுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் தங்கும் உத்தரவை முதல் முறையாக தளர்த்திய ஆளு நர்களில் கெம்ப்பும் ஒருவர்.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது அளவுக்கு மீறிய கட்டுப்பாடு என்று அவர் கூறி யிருந்தார். ஆனால் ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் அதன் மேயர் கெய்ஷா லான்ஸ், கெம்ப்பின் உத்தரவுக்கு எதிராக முகக் கவசத்தை கட்டாயமாக்கியுள்ளார்.