வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட மாட்டேன் என்று அதிபர் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவலி லிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது முக்கியம் என்று உலக முழுவதும் உள்ள சுகாதாரத் துறை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியவில்லை. அதிபர் தேர்தல் பிரசாரக்கூட்டத்திலும் முகக்கவசம் அணியாமல் அவர் பங்கேற்றதால் பலர் குறை கூறினர். ஆனால் அவற்றை டிரம்ப் சிறிதளவுகூட மதிப்பதாக தெரிய வில்லை.
கடந்த சனிக்கிழமை அன்று வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற அவர் முதல் முறையாக முகக்கவசத்துடன் காணப்பட்டார்.
வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு பேசிய அதிபர் டிரம்ப், முகக்கவசத்துக்கு தான் எப்போதும் எதிரியல்ல என்றார்.
"முகக்கவசத்தை அணிய வேண்டிய இடத்தில் அணிய வேண்டிய நேரத்தில் அணிய வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஃபாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில் நாடு முழுவதும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க விரும்பவில்லை என்றும் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோணி ஃபவுசி, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மாநில, உள்ளூர் தலைவர்கள் கட்டாயமாக்க வேண்டும். முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியம். ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும்," என்று கூறினார்.
இதையடுத்து பெரும்பாலான மாநில ஆளுநர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
இதற்கிடையே கிருமிப் பரவலின் மையமாக விளங்கும் நியூயார்க் நகரம் நாளையிலிருந்து நான்காவது கட்ட தளர்வில் அடியெடுத்து வைக்கிறது. இறுதிக்கட்ட நடவடிக்கையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு குவோமோ தெரிவித்தார். நான்காவது கட்ட தளர்வின் கீழ் ரசிகர்கள் பங்கேற்காத விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
விலங்குக் காட்சி சாலை, தாவரத் தோட்டம், வெளிப்புற படப்பிடிப்பு ஆகியவை தொடங்கவும் அனுமதிக்கப்படும்.
ஆனால் உணவகங்களில் உணவு சாப்பிடுவது, அருங்காட்சியகம், கடைத் தொகுதிகள் ஆகியவற்றுக்கு உள்ள தடைகள் நீடிக்கும் என்று மேயர் பில் டி பிளாசியோ வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக் கிழமை அன்று ஒரே நாளில் 70,000 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் குறைந்தது 912 பேர் உயிரிழந்தனர்.

