கோலாலம்பூர்: மலேசியா, வெளி நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடு திரும்ப உதவி செய்துள்ளது.
இருந்தாலும் இன்னமும் 20,000 மாணவர்கள் வெளிநாடுகளில் தவிப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சரான முஹமது ரிட்சுவான் யூசோப் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 பரவல் காரணமாக அனைத்துலக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டில் உள்ள மாணவர்களை கட்டம் கட்டமாக தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாக அவர் கூறினார்.
"குறிப்பாக படிப்பை முடித்த மாணவர்களை தாமதிக்காமல் தாயகத்துக்கு அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கல்வி அமைச்சும் அவர்கள் நாடு திரும்புவதை உறுதி செய்யும்," என்று கிளந்தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் முஹமது ரிட்சுவான் யூசோப் கூறினார்.
மாணவர்களை அழைத்து வருவதில் உள்ள சிக்கல்களை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உதாரணமாக, அவர்கள் தங்கியுள்ள நாடு அனைத்துலக விமானச் சேவைகளை அனுமதிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் கிருமித்தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் விமானச் சேவைகளுக்கு அனுமதி வழங்கினால் மாணவர்களை அழைத்து வர முடியும் என்று அவர் கூறியதாக பெர்னாமா குறிப்பிட்டது.
அண்மைய வாரங்களாக மலேசிய அரசாங்கத்தின் ஏற்பாட்டின் மூலம் எகிப்திலிருந்து 5,000 மாணவர்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து 200 மாணவர்களும் நாடு திரும்பி யுள்ளனர்.
இதற்கிடையே வெள்ளிக் கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக மொத்தம் 707 மலேசியர்கள் நாடு திரும்பியதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரி வித்தார்.
சீனா, இந்தோனீசியா, கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசு, சிங்கப்பூர், கம்போடியா, பிலிப்பீன்ஸ், ஹாங் காங், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் வந்ததாகவும் அவர் கூறினார்.
"அவர்களில் 706 பேருக்கு கட்டாயமாக வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்," என்று நேற்று வெளியிட்ட அறிக் கையில் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று காலை மேலும் 96 மலேசியர்கள் சிறப்பு மலிண்டோ விமானத்தின் மூலம் இந்தியாவி லிருந்து மலேசியா திரும்பியதாகவும் அவர்களில் 62 பேர் தப்லிக் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"கொேரானா கிருமித் தொற்று ஆபத்துள்ள நாட்டிலிருந்து வந்த தால் நிலாயில் உள்ள அரசாங்க வசிப்பிடத்தில் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

