ராமர் அவதரித்த இடமாக நேப்பாள பிரதமர் கூறிய இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்த திட்டம்

ராமர் அவதரித்த இடமாக நேப்பாள பிரதமர் கூறிய இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்த திட்டம்

2 mins read
607f1a0a-6f55-4185-ab60-a0d4c2611cb9
தோரி பகுதியில் நடக்கவுள்ள அகழாய்வு தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்லியல்துறை செய்தித்தொடர்பாளர் ராம்பகதூர் கன்வார் கூறியுள்ளார். படம்: ஊடகம் -

ராமர் பிறந்த அயோத்தி நகரம், நேப்பாள நாட்டில் இருப்பதாக அந்நாட்டுப் பிரதமரின் அண்மைய அறிவிப்பு, இந்தியாவில் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில், ராமரின் பிறப்பிடம் குறித்த உண்மைநிலை அறிவதற்காக தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் அவதரித்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆலயம் எழுப்ப அடுத்த மாதம் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் உண்மைநிலை அறிவதற்காக தோரி பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாத் தெரிகிறது.

தோரியில் புராதன, தொன்மையான இந்து மதம் சார்ந்த வரலாற்றுச் சின்னங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தோரி பகுதியில் நடக்கவுள்ள அகழாய்வு தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்லியல்துறை செய்தித்தொடர்பாளர் ராம்பகதூர் கன்வார் கூறியுள்ளார்.

''வால்மீகி ராமாயணத்தை, அது குறிப்பிடும் புவியியல் நில அடிப்படையில் பார்க்கும் போது ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தி, நேப்பாளத்தின் ஜனக்பூர் அருகில் இருந்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் தற்போதுள்ள அயோத்தியில் இருந்து குதிரை வண்டி மூலம் ஜனக்பூர் செல்ல 7 நாட்களாவது ஆகும். ஆனால், ராமாயணத்தில் ராமர், ஜனக்பூருக்கு ஒரே நாளில் சென்றதாக கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? ஆகவே, புராதன நகரமான அயோத்தியின் உண்மையான இருப்பிடம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று நேப்பாளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜக்மன் குரூங் கூறியுள்ளார்.

நேப்பாள பிரதமரின் கருத்து யாருடைய உணர்வையும் புண்படுத்தும் வகையானது அல்ல என்று அந்நாட்டு நாட்டின் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

"இந்தியாவின் பழமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகம் நன்கறியும்," என இந்தியாவின் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்