மூத்த அமைச்சர் தர்மன்: தேர்தல் முடிவு சிங்கப்பூருக்கு நல்லது

மூத்த அமைச்சர் தர்மன்: தேர்தல் முடிவு சிங்கப்பூருக்கு நல்லது

2 mins read
4654327b-1122-4db9-872c-c65faa6826be
-

அண்மையில் நடந்து முடிந்த 2020 பொதுத் தேர்தல் முடிவு சிங்கப்பூருக்கு நல்லது என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். அரசியலில் புதிய சமநிலை ஒன்று இருக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்களிடம் நிலவும் ஒரு விருப்பத்தை தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் நிரந்தரமாக மாறி இருக்கிறது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் திரு தர்மன் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அரசியல் சமநிலை சிங்கப்பூருக்குச் சாதக மான நல்லமுறையில் பயன் அளிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மக்கள் செயல் கட்சியும் அரசியலில் உள்ள எதிர்த்தரப்பும் ஒன்று மற்றொன்றைச் சரிசமமாகப் பாவித்து, இரண்டுக்கும் இடையில் பொருள் பொதிந்த, காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் பட்சத்தில் இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு காரணங்களைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தல் முடிவு மக்கள் செயல் கட்சிக்கு நல்லதாக இருக்கிறது என்றார் அவர். ஆளும் கட்சி 61.2 விழுக்காடு வாக்குகளுடன் திட்டவட்டமான, உறுதியான வெற்றியைப் பெற்று இருக்கிறது என்பது முதல் காரணம். சிங்கப்பூரர்களுக்குத் தலைசிறந்த கட்சி மசெகதான் என்பதும் மசெக நிர்வகித்து நடத்தும் அரசாங்கத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அப்படியே மாறாமல் இருக்கிறது என்பதையும் திரு தர்மன் சுட்டினார்.

சென்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் மசெகவுக்கு 8.7 விழுக்காடு வாக்கு குறைந்து இருக்கிறது. மாறிவரும் வாக்காளர்களின் மனதை மட்டுமின்றி அவர்களின் இதயத்தையும் தன்வசப்படுத்தும் வகையில் மக்கள் செயல் கட்சி தன் சொந்த வியூகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பது இரண்டாவது காரணம் என்று மூத்த அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் எதிர்த்தரப்புக்கும் நல்லதாக அமைந்து இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், மற்ற எதிர்க்கட்சிகளைவிட பாட்டாளிக் கட்சிக்கு முன்பைவிட வாக்குகள் வலுவாகக் கிடைத்து இருப்பது ஒரு வித அரசியல் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது, இது சிங்கப்பூருக்கு நல்லது என்று தெரிவித்தார்.