அமெரிக்காவில் மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் சில மாநிலங்களில் சமூக பாதுகாப்பு இடைவெளி உட்பட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக கொவிட்-19 மரணங்கள் அதிகரித்துள்ளன.

கொவிட்-19 கிருமித் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

கிருமிப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பாதிக்கப்பட்டவர்களைவிட கடந்த ஜூன் மாதத்தில் அங்கு மீண்டும் கிருமித்தொற்று அதிகமானவர்களை பாதித்தது. அப்போது பேசிய அதிபர் டோனல்ட் டிரம்ப், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் மரணங்கள் குறைந்து வருவதாக அறிவித்தார்.

ஆனால் கீழ் நோக்கி இறங்கி வந்த மரண எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக ஏறுமுகமாக இருந்துவருகிறது. அதாவது கிருமித் தொற்றால் இறப்பவர்களின் சராசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

இந்த நிலையில் மரண எண்ணிக்கை ஏன் ஆரம்பத்தில் அதிகரிக்காமல் ஒரே சீராக இருந்தது என்பதற்கு பொதுச் சுகாதார அதிகாரிகள் சில காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டாலும் மரணம் ஏற்படாமல் தப்பிய இளையர்கள் பாதிக்கப்பட்ட வர்களில் பெரும் பங்கு வகித்தனர். இதனால் மரணங்கள் குறைவாக இருந்தன.

ஆனால் அதன் பிறகு கொவிட்-19 சோதனைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் அடுத்த சில வாரங்களில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இறந்தனர்.

இதையடுத்து மரண எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவில் இதுவரை 3.83 மில்லியன் பேருக்கு மேல் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

142,000 பேர் கிருமித் தொற்றுக்கு பலியாகிவிட்டனர்.