ஹாங்காங்கில் கிருமித்தொற்று நெருக்கடி

ஹாங்காங்: ஹாங்காங் நிர்வாகம், கட்டுக்கடங்காமல் பரவும் கிருமிப் பரவலைத் தடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த அரசாங்க ஊழியர்கள் நேற்று முதல் முறையாக அலுவலகத்துக்குத் திரும்பியுள்ளனர்.

ஹாங்காங் சுகாதார நிபுணர்கள், கிருமித்தொற்று அதிகரிப்பதால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஹாங்காங்கை பகுதிநேரமாக முடக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை யாகும். உள்ளூர் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹாங்காங்கின் நுண்ணுயிர் உயிரியல் நிபுணரான பேராசிரியர் யுவென் குவோக் யுங், அடுத்த ஓரிரு வாரங்களில் கிருமித் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் நகரை பகுதி நேரமாக முடக்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார்.

தனிமைப்படுத்துவது உட்பட எல்லைக் கட்டுப்பாடு தீவிரமாக மேற்கொள்ளப்படாததால் கிருமிப்பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதர தொற்றுநோய் நிபுணர்களும் கிருமி பரவாமல் தடுக்க வேண்டுமானால் மக்களும் விதிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கிருமித் தொற்று அதிகரித்தாலும் அதனை முறியடிக்கும் புதிய நடவடிக்கைகளை தீவிரமாக அமல் படுத்தினால் அடுத்த சில வாரங்களில் பாதிப்பு குறையத் தொடங்கும் என்று ஹாங்காங்கின் சீனா பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ஹுய் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் புதிதாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 66 பேருக்கு உள்ளூரில் கிருமித் தொற்று ஏற்பட்டு உள்ளது.

மொத்தம் 1985 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை 12 பேர் இறந்துவிட்டனர்.