கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயாரை தினமும் குழாய் வழி ஏறி, ஜன்னலில் அமர்ந்து பார்த்த மகன்

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து சோகத்துடன் பார்க்கும் மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளையரின் தாயார் அஸ்மி சலமா அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

அவர் ஏற்கெனவே லூக்கிமியா புற்று நோயால் சிரமப்பட்டு வந்தார்.

கொரோனா தொற்று நோயாளிகளை பார்வையாளர்கள் சந்திக்கவோ பார்க்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 வயது இளையரான அல் ஸ்வைட்டி, தூரத்தில் இருந்தே தாயைப் பார்க்க முடிவு செய்தார்.

அவரது தாயார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து, மருத்துவமனையின் குழாய் வழியாக ஏறி இரண்டாவது மாடியின் சன்னலில் அமர்ந்து தனது தாயாரை தினமும் பார்த்து வந்தார். தாயார் உறங்கியதை உறுதி செய்த பிறகே அவர் அவ்விடத்திலிருந்து இறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மருத்துவமனை நிர்வாகம் இதற்குத் தடை விதித்தபோதும், அல் ஸ்வைட்டி அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இம்மாதம் 16ஆம் தேதி அவரது தாயார் ராஸ்மி உயிரிழந்ததையடுத்து மிகுந்த சோகத்துக்காளாகினார் அல் சுவைட்டி. 

வீட்டில் இளைய மகனான அல் ஸ்வைட்டி அவரது தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் என அவரது மூத்த சகோதரர் தெரிவித்தார். அவரது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.