மலேசிய குடிமக்கள் உட்பட மலேசியாவுக்குள் நுழையும் அனைவரும் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி வீட்டுக்குப் பதிலாக அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் நிலையங்களில் அவர்கள் தங்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று (ஜூலை 21) அறிவித்தார்.
புதிய மாற்றம் ஜூலை 24ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
கட்டாயமாக தனிமையில் தங்க வேண்டியவர்கள் அதற்கான முழுச் செலவையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதால் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்பு போல தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"வெளிநாட்டிலிருந்து வரும் நமது குடிமக்கள் வீட்டில் தனிமையில் தங்குவது கட்டாயமாக இருந்தது. ஆனால் விதிமுறைகளை மீறி கையில் அணிவிக்கப்பட்ட பட்டையுடன் உணவகங்களில் உணவு சாப்பிடுகிறார்கள். வெளிநாட்டில்இருந்து திரும்பி, 14 நாட்கள் தனி மைப்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண கைப்பட்டை அறி முகப்படுத்தப்பட்டது. ஆனால் அதனுடன் அரசாங்கத்தின் விதிமுறையை மீறி அவர்கள் வெளியே செல்கின்றனர்," என்று அவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் இனி சளி மாதிரி கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள தேவையில்லை. தற்போது அவர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் வெளிநாட்டவர்களிடம் கொவிட்-19 பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திரு இஸ்மாயில் சப்ரி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் செய்துள்ள இந்த மாற்றத்தை மருத்துவ நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவரான டாக்டர் என். கானபாஸ்கரன், "வெளிநாடுகளிலிருந்து திரும்புவோரை வீடுகளுக்கப் பதிலாக தனிமைப்படுத்தும் நிலையங்களில் தங்க வைப்பது சிறந்தது. சில வீடுகள் சிறியதாக தங்குவதற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.


