பிரசாரத்துக்கு தாராளமாக செலவு செய்யும் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடவிருக்கிறார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்குவதால் இருவரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து இவர்கள் இருவரும் தேர்தல் பிரசாரத்துக்கு செலவு செய்த தொகை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தேர்தல் பிரசாரத்துக்கு ஐம்பது மில்லியன் டாலருக்கு மேல் செலவழித்துள்ளார். இதனுடன் சேர்த்து மொத்தம் டிரம்ப் செலவழித்த தொகை 113 மில்லியன் டாலராகும்.

இவருக்குப் போட்டியாக தேர்தல் களத்தில் உள்ள ஜோ பைடன் ஜூன் மாதத்தில் 36.9 மில்லியன் டாலர் செலவழித்துள்ளார்.

இதுவரை இவர் செலவு செய்த மொத்த தொகை 108.9 மில்லியன் டாலராகும். இந்த நிலையில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் தனது பெரும்பாலான தொகையை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கே அதிபர் டிரம்ப் செலவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவு தொலைக்காட்சி விளம்பரங்களை டிரம்பின் பிரசாரக் குழு வினர் வாங்கியுள்ளனர்.

திரு பைடன், கடுமையான போட்டி நிலவும் பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகிய இடங்களை குறி வைத்து தேர்தல் பிரசாரத்தை ஜூன் மாதம் பிற்பகுதியில் தொடங்கியிருக்கிறார்.

இருவரின் செலவுகளையும் ஆராய்ந்து வரும் வெஸ்லேயான் மீடியா எனும் நிறுவனம், மே 11க்கும் ஜூன் 28க்கும் இடையே டிரம்ப்பின் பிரசாரக் குழுவினர் ஏறக்குறைய 50,0000 விளம்பரங்களை நாடு முழுவதும் வாங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவித்தது. அதே காலக்கட்டத்தில் ஜோ பைடன் 3,100 விளம்பரங்களை மட்டுமே வாங்கியிருந்தார்.