சீனா எச்சரிக்கை: பிரிட்டன் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்

லண்டன்: ஹாங்காங் விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டனை சீனா எச்சரித்தது.

ஹாங்காங் மீது தனது பிடியை இறுக்கும் வகையில் சீனா அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இதனால் ஹாங்காங்வாசிகளை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பியனுப்பும் உடன்பாட்டை ரத்து செய்வதாக சென்ற திங்கட்கிழமை பிரிட்டன் அறிவித்தது. இது, சீனாவுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடித் தந்துள்ள லண்டனில் உள்ள சீனாவின் தூதர் லியு சியோமிங், “பிரிட்டன் விவகாரத்தில் சீனா எப்போதும் தலையிட்டதில்லை. அதுபோல பிரிட்டனும் நடந்துகொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

இம்மாதத் தொடக்கத்தில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், மூன்று மில்லியன் ஹாங்காங்வாசிகளுக்கு பிரிட்டிஷ் குடியுரிமைக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்க அனுமதி வழங்கப்படும் என்று உறுதி கூறியிருந்தார்.

பிரிட்டனின் ‘5ஜி’ கைபேசி கட்டமைப்பிலிருந்து சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவெய்யை அகற்றும் மற்றோர் அறிவிப்பையும் பிரிட்டன் வெளியிட்டது.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து பிரிட்டனின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின.

ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக சீனா இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக பரவலாக குறை கூறப் படுகிறது.

முன்னைய பிரட்டிஷ் காலனியான ஹாங்காங் 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா புகுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.