பெற்றோரைக் கொன்ற பயங்கரவாதிகளைச் சுட்டு வீழ்த்திய சிறுமி

தமது பெற்றோர்களைக் கொன்ற தலிபான் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை ஆப்கானிய பதின்ம வயது பெண் சுட்டுக்கொன்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் கோர் மாநிலத்தில் வசித்துவந்த கமார் குல் என்ற அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள்,  ஊர்த்தலைவரான அவரது தந்தையை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர். தடுக்க வந்த தாயாரையும் சுட்டனர். பெற்றோர் சுடப்பட்டதும் வீட்டுக்குள் இருந்த கமார் குல், வீட்டில் இருந்த ஏகே-47 துப்பாக்கியை எடுத்து வந்து பெற்றோரைக் கொன்ற இருவரையும் சுட்டார். அங்கு நின்ற மற்றவர்களையும் தாக்கினார். கமார் குல்லின் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டில் சரியான வயது பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை.

கமாரின் தந்தை அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவாளராக இருந்ததால் தலிபான் அமைப்பினர் அவரைக் கொல்ல முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

கமார் குல் தாக்கியதை அடுத்து,  பல தலிபான் கிளர்ச்சியாளர்கள் அவரைத் தாக்க வந்துள்ளனர்.  ஊர்மக்களும் அரசாங்கத்திற்கு ஆதரவான துப்பாக்கிக்காரர்களும் தாக்குதல் நடத்தி கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து விரட்டினர். தலிபான் அமைப்பை எதிர்ப்பு அரசாங்கத்திற்கு உளவு சொல்கிறார்கள் என்று கிராமங்களுக்குள் புகுந்து தலிபான் கிளர்ச்சியாளர்கள் மக்களை கொன்று வருகிறார்கள்.

இந்நிலையில் கமார் குல்லின் துணிகரமான செயல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் ஏகே-47 துப்பாக்கியைக் கையில் பிடித்திருக்கும் படம் பரவலாகி வருகிறது.  ஆப்கான் பாதுகாப்புப் படையினர் கமாரையும் அவரது தம்பியையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாக அந்நாட்டின் மாநில ஆளுநர் முகம்மது அரெப் அபர் தெரிவித்தார்.