பொது இடங்களுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதும் அந்த விதிமுறைக்கு உட்பட மறுப்பவர்களுக்கு எத்தகைய தண்டனை விதிக்கலாம் என மலேசிய அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.
விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது அல்லது சிறைத் தண்டனை விதிப்பது குறித்து மலேசிய அரசு ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் பொது இடங்களில் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டால் அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றார் அவர்.
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைபவர்
களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து மூன்று நாட்களாகப் பத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
நேற்று முன்தினம் நிலவரப்படி மேலும் 15 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 11 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
"முகக்கவசம் அணிந்துகொள்வதை சுகாதார அமைச்சு ஊக்குவிக்கிறது. குறிப்பாக, பொது இடங்கள், பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க சிரமமான இடங்களில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்.
"முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதும் அதை அணியாதவர்கரளுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

