கோலாலம்பூர்: மலேசியாவில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவிருக்கிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து மக்கள் கட்டாயமாக முகக் கவ சத்தை அணிய வேண்டும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார்.
கட்டாய முகக்கவச விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
கடந்த மூன்று நாட்களாக கிருமித்தொற்று அதிகரிப்பதாலும் விதிமுறைகள் மீறப்படுவதாலும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்து உள்ளதாக அவர் சொன்னார்.
"பொதுமக்களில் 50 விழுக்காட்டினர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று சுகாதார அமைச்சின் அறிக்கை கூறுகிறது. கிருமித் தொற்று இரட்டை இலக்குக்கு அதிகரித்துள்ளது.
"இதனால் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்தது," என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு இஸ்மாயில் சப்ரி கூறினார்.
குறைந்த வருமானக் குடும்பத்தினருக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்ற வேண்டாம் என்பதற்காகவே முன்பு முகக்கவசத்தை கட்டாயமாக்குவதிலிருந்து அரசு விலகியிருந்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கட்டாயமாக்க வேண்டியுள்ளது என்று மூத்த அமைச்சர் குறிப்பிட்டார்.

