கோலாலம்பூர்: பெர்சத்துக் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தமக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால் புதிய கட்சியைத் தொடங்குவேன் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் அறிவித்து உள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றுவேன் என்றார் அவர்.
திரு மகாதீர் தவிர பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த இதர நான்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பெர்சத்துக் கட்சியின் தற்போதைய தலைவரும் பிரதமருமான முகைதீன் யாசின் மற்றும் மூன்று பேர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இம்மாதம் 14ஆம் தேதி பேசிய டாக்டர் மகாதீர் தாமும் தனது ஆதரவாளர்களும் திடீர் தேர்தல் நடைபெற்றால் புதிய கட்சியின் கீழ் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
பக்கத்தான் ஹரப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை என்றும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தபோது பொருளியல் விவகார அமைச்சராக பணியாற்றிய கெஅடிலான் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது,
இதற்குப் பதிலளித்த டாக்டர் மகாதீர், அஸ்மின் அலியின் அரசியல் பார்வை குறுகியதாக இருக்கிறது என்றார்.
"கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமை எதிர்க்க வேண்டும் என்பதே அஸ்மின் அலியின் இலக்காக உள்ளது. ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக அதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ளக்கூடாது. நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் அவர் சிந்திக்க வேண்டும்," என்று மகாதீர் சொன்னார்.

