விக்டோரியாவில் வீட்டுக்கு ராணுவம் அனுப்ப முடிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசு, கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு ராணுவ வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

கொரோனா கிருமி கட்டுக்கடங் காமல் பரவுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர் அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை.

இதனால் கிருமி பரவும் தொடர்பு தடங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ருஸ் தெரிவித்தார்.

கிருமிப் பரவலை முறியடிக்க மக்கள் நெரிசல்மிக்க மெல்பர்ன் நகரமும் ஆறு வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் கட்டாயம் முகக் கவசத்தை அணிய வேண்டும், இல்லையேல் 200 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் அனுப்பி வைக்கப்படுவது பற்றி பேசிய திரு ஆண்ட்ருஸ், இது ஒரு கூடுதலான நடவடிக்கை என்றார்.

“தொலைபேசி அழைப்புக்கு பதில் இல்லாவிட்டாலும் அவர்களை தொடர்பு கொண்டு காரணங்களைக் கேட்டறிவோம்.

“இதன் மூலம் நோய் பரவும் தொடர்பு தடங்களைக் கண்டறிய முயற்சி செய்வோம். வீட்டுக்கதவைத் தட்டும்போது வீட்டில் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்,” என்றார் அவர்.

விக்டோரியா மாநிலத்தில் கடந்த ஒரே இரவில் ஆறு பேர் கிருமித் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களுடன் தொடர்பு உடையவர்கள். விக்டோரியா முழுவதும் 300 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, புதன்கிழமை பதிவான 484 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறைவு.