உலகளவில் ஒரே நாளில் 284,000 பேருக்கு தொற்று

ஜெனிவா: உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிய உச்சமாக 284,196 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடைசியாக ஜூலை 18ஆம் தேதி 259,848 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதே ஆக அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.

கிருமித்தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 9,753 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் ஆக அதிகமாக மரண எண்ணிக்கை பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை. ஏப்ரல் 30ஆம் தேதி 9,797 பேர் மரணமடைந்தனர். இம்மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5,000 மரணங்கள் பதிவாகின. ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 4,600ஆக இருந்தது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் 69,641 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. பிரேசிலில் 67,860 சம்பவங்களும் இந்தியாவில் 49,310 சம்பவங்களும் பதிவாகின. தென்னாப்பிரிக்காவில் 13,104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மரணங்களைப் பொறுத்தவரை, பெருவில் ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் 1,284 பேரும் அமெரிக்காவில் 1,074 பேரும் மெக்சிகோவில் 790 பேரும் இந்தியாவில் 740 பேரும் உயிரிழந்தனர்.

பெருவில் கொவிட்-19 தொடர்பான தகவலை வெளியிடும் முறை அண்மையில் மறுஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, மொத்த மரண எண்ணிக்கை ஒரே நாளில் 3,000க்கும் மேலாக கூட்டப்பட்டது.

பிரேசிலில் இம்மாதம் 16ஆம் தேதி கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இரண்டு மில்லியனைக் கடந்தன. ஒரு மாதத்திற்குள் சம்பவங்கள் இரு மடங்கு அதிகரித்தன.

உலகிலேயே கொரோனா கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அங்கு கிருமித்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.