வீட்டின்மேல் விழுந்து தீப்பிழம்பான விமானம்

அமெரிக்காவின் யூத்தா மாநிலத்திலுள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஆறு பயணிகளைக் கொண்ட சிறிய விமானம் ஒன்று, ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிழம்பானது. இந்தச் சம்பவத்தில் ஒன்பது மாதக்குழந்தை உட்பட குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

'சவுத் வேலி' வட்டார விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் அமெரிக்க நேரப்படி சுமார் 1.30 மணிக்கு சவுத் தேக் சிட்டிக்கு தெற்கிலிருந்து 13 மைல் தொலைவிலுள்ள வெஸ்ட் ஜோர்டன் பகுதியில் விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்தது. அந்நேரத்தில் வீட்டில் இருந்த ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் போலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மற்ற இருவரில் ஒருவர் அந்த விமானத்தின் விமானி என்றும் மற்றொருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இரண்டு வயது குழந்தை ஒன்று மருத்துவமனையில் தேறி வருவதாகவும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.