டெக்சஸ் மாநிலத்தின் தெற்கில் பெரும்புயல்

டெக்சஸ் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ஹரிக்கேன் ஹன்னா புகுந்து தற்போது கோர்பஸ் கிறிஸ்டி மற்றும் பிரௌன்ஸ்வில் பகுதிகளை பாதித்து வருகிறது. ஏற்கெனவே கொரோனா கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அவசர சேவைகளை இந்தப் புயல் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதாக அந்த மாநிலத்திலுள்ள 32 பகுதிகளுக்கு அவரச நிலை அறிவித்த மாநில ஆளுநர் கிரெக் அப்போட் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்று, சில வீடுகளின் கூரைகளைப் பெயர்த்தெடுத்துள்ளது. இந்தப் புயல் ஹியுஸ்டன் பகுதிக்குள் சுற்றியிருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே டக்லஸ் புயலும் ஹவாயி தீவை நெருங்கி வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களையும் தமது நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் அது ஒத்துழைக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்தார்.