பிரஞ்சு தேவாலயத்திற்கு தீ வைத்தது அங்கு பணிபுரிந்த தொண்டூழியர்

பிரான்சின் மேற்குப் பகுதியிலுள்ள 'நாண்ட' (Nantes) நகரின் பழம்பெரும் தேவாலயத்திற்குத் தீ வைத்தவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதியன்று நடந்த அந்தச் தீச்சம்பவத்தின் தொடர்பில் ருவாண்டாவில் பிறந்து பிரான்சுக்கு அகதியாக வந்த அந்த 39 வயது ஆடவர் நேற்று கைது  செய்யப்பட்டார். அங்கு தொண்டூழியராகப் பணியாற்றி வந்த இவர் இதனை ஏன் செய்தார் என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை. ஆயினும் அந்த ஆடவர் தமது செயலுக்காக மிகவும் வருந்துவதாக அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்காக அவர் 10 ஆண்டுகள் வரை சிறை செல்லலாம். அத்துடன் அவர் 150,000 இயூரோ வரையிலான அபராதத்தையும் எதிர்நோக்குகிறார்.

15ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின்போது கட்டி முடிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.