மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதால் தாம் ஏமாற்றப்பட்டதை இப்போதுதான் தெரிந்துகொண்டதாக கெஅடிலான் ராக்யாட் கட்சியைச் சேர்ந்த அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவின் 'சின் சியூ' நாளிதழுக்குப் பேட்டி அளித்த திரு அன்வார், ஈராண்டுக்குப் பின்னர் டாக்டர் மகாதீர் தமக்குப் பிரதமர் பதவியை அளிக்கப்போவதாகக் கொடுத்த வாக்குறுதியை தான் நம்பியதாகக் கூறினார்.
"எங்களுக்கு அப்போது தெரியவில்லை, ஆனால் இப்போது தெரியும்," என திரு அன்வார் நேற்று அந்தப் பேட்டியில் கூறினார்.
பிரதமர் பதவியை ஒப்படைக்கப்போவதாகக் கூறும் தேதியை டாக்டர் மகாதீர் மாற்றிக்கொண்டே இருந்து இறுதியில் இவ்வாண்டு நவம்பர் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புச் சந்திப்புக்குப் பிறகு பதவி விலகப் போவதாகத் தெரிவித்தார்."
பிப்ரவரி 24ஆம் தேதியன்று டாக்டர் மகாதீர் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களிடம் கூறாமலேயே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது.
தாம் பிரதமர் ஆவதைப் பலர் எதிர்ப்பதைத் தாம் அறிவதாக திரு அன்வார் தெரிவித்தார். "எனக்கு எதிராக பல செல்வந்தர்களும் இருந்தனர். அவர்களில் எனக்குத் தெரிந்த ஒரு மலாய்க்காரர் இருக்கிறார். அன்வார் மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதில்லை என்று கூறி இன விவகாரத்தை வைத்து விளையாடுகின்றனர்," என்று திரு அன்வார் சாடினார்.
தமது குறிக்கோள் பொருளியலைப் பற்றியதுதான் எனத் தெரிவித்த திரு அன்வார், அனைவரும் வெற்றியடைலாம் என்றும் சீன வர்த்தகர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவரையும் ஆதரிக்கவேண்டும் என்றும் நிலைப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.
22 மாதங்களுக்கு நீடித்த பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் சரிவுக்கு டாக்டர் மகாதீரின் பதவி விலகலே காரணம் என்று திரு அன்வார் தெரிவித்தார். டாக்டர் மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால் கட்சியின் உட்பூசல்கள் ஓரளவு தீர்க்கப்பட்டிருக்கலாம்.
"கெஅடிலான் ராக்யாட் கட்சியிலும் பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியிலும் துரோகிகள் இருப்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் இவர்கள் ஒரே வாரத்தில் காளான்களைப் போல முளைத்துள்ளனர் என நீங்கள் நினைத்தீர்களா? இதனை இவர்கள் வெகு காலத்திற்கு முன்னதாகவே
திட்டமிட்டிருந்தனர். இந்தச் சூழல் உருவாக நாம் ஏன் அனுமதித்தோம் என்பது கேள்வியாக உள்ளது," என்று அவர் கூறினார்.

