ஏட்டிக்குப் போட்டியாக துணைத் தூதரகங்களை மூடிய சீனா, அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் சீன துணைத் தூதரகத்திலுள்ள அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதை அடுத்து சீனாவின் சீசுவான் மாநிலத்திலுள்ள செங்டூ நகரிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திலுள்ள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை  அமெரிக்க அதிகாரிகளை 72 மணி நேரத்திற்குள் வெளியேறக் கோரிய சீனா, இன்று துணைத்தூதரக வளாகத்தைக் கைப்பற்றியது. அமெரிக்காவில் சீன துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் இதே நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.
செங்டூவிலுள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தில் இதுவரை பறக்க விடப்பட்ட அமெரிக்கக் கொடி இறக்கப்பட்டு அதற்குப் பதிலாக சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டதைக் காட்டும் காணொளிகள் சீனாவின் வெய்போ தளத்தில் பரவுகின்றன.

1985ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த அந்தத் தூதரகத்தை சீனா மூட முடிவு செய்தது அமெரிக்காவுக்கு வருத்தமளிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வர்த்தகம், தொழில்நுட்பம், தென் சீனக் கடல் சர்ச்சை, ஹாங்காங்கின்  கொவிட்-19 உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சினைகள் தற்போது அமெரிக்க-சீன உறவைச் சூழ்ந்துள்ளன.