ஆசிய நாடுகளில் இரண்டாவது அலை; ஹாங்காங்கில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

பல ஆசிய நாடு­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலையை எதிர்த்துப் போராடி வரும் வேளை­யில், பல நாடு­கள் மீண்­டும் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்கத் தொடங்­கி­யுள்­ளன.

சீனா உட்­பட ஆஸ்­தி­ரே­லியா, வியட்­னாம், ஹாங்­காங் போன்ற நாடு­களில் கடந்த சில வாரங்­க­ளாகக் கிரு­மித்­தொற்று மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளது.

 

வியட்­னாம்

வியட்­னா­மின் புகழ்­பெற்ற சுற்­று­லாத் தள­மான டானாங் நக­ரில் மூன்று பேருக்கு இவ்­வார இறு­தி­யில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. எனவே அந்­நாடு மீண்­டும் உச்­ச­கட்ட விழிப்­பு­நி­லைக்­குத் திரும்­பி­யது.

இதை­ய­டுத்து, டானாங் நக­ரில் இருந்து சுமார் 80,000 பேர் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் அனை­வ­ருக்­கும் வீட்­டி­லேயே தங்­கும் உத்­த­ரவு பிறப்பிக்­கப்­பட்­டுள்­ளது.

 

ஹாங்­காங் 

ஹாங்­காங்­கில் நேற்று தொடர்ந்து 5வது நாளாக 100க்கும் மேற்­பட்ட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­வ­தால், அங்கு கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

முதன்­மு­றை­யாக உண­வ­கங்­களில் அமர்ந்து உண­வ­ருந்த ஹாங்­காங் தடை விதித்­துள்­ளது.

இது­த­விர இரு­வ­ருக்கு மேல் கூடு­வ­தற்­குத் தடை, அனைத்து பொது இடங்­க­ளி­லும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் போன்ற கட்­டுப்­பா­டு­களும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று அறி­விக்­கப்­பட்ட இந்த கட்­டுப்­பா­டு­கள் புதன்­கி­ழமை முதல் ஏழு நாட்­க­ளுக்கு நடப்­பில் இருக்­கும். ஹாங்­காங்­கில் இதுவரை 2,600 பேருக்­கும் மேல் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 

சீனா

இதற்­கி­டையே சீனா­வில் வூஹான், பெய்­ஜிங்­கைத் தொடர்ந்து தற்­போது ஸின்­ஜி­யாங் பகு­தி­யில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­துள்­ளது. சீனா­வில் திங்­கட்­கி­ழ­மை­யன்று 61 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இது ஏப்­ரல் மாதத்­திற்­குப் பிறகு பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 57 பேர் ஸின்­ஜி­யாங் பகு­தி­யை­யும் 14 பேர் லியோ­னிங் பகு­தி­யை­யும் சேர்ந்­த­வர்­கள். எனவே அப்­ப­கு­தி­களில் மக்­கள் நட­மாட்­டம் முடக்­கப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லியா

அதே­போல், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை ஒவ்­வோர் நாளும் உச்­ச­ம­டை­வ­தால் தற்­போ­துள்ள ஆறு வார முடக்க உத்­த­ரவு மேலும் நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது. மேலும் கிரு­மித்­தொற்­றால் ஏற்­படும் மர­ணங்­களும் அங்கு அதி­க­ரித்­துள்­ளன.

 

மலே­சியா

மலே­சி­யா­வில் கடந்த சில நாட்­க­ளாக பாதிக்­கப்­படு­வோர் எண்­ணிக்கை 10க்கும் மேல் பதி­வாகி வரு­வ­தால், கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் அறி­விக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தென்­கொ­ரியா, பாப்­புவா நியூ­கி­னி­யா­வி­லும் கிரு­மிப் பர­வல் நித்­த­மும் உச்­ச­ம­டைந்து வரு­கிறது.