‘எல்லைகளை மூடி வைத்திருப்பது நிலையான உத்தியல்ல’

ஜெனீவா: கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தங்கள் எல்லைகளைக் காலவரையறையின்றி மூடி வைத்திருப்பது நிலையான உத்தியாக இருக்காது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே உள்ளூர் கிருமிப் பரவல் நிலவரத்தின் அடிப்படையில் விரிவான திட்டங்களைக் கடைப்

பிடிக்குமாறும் அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடக்க உத்தரவுக்கு அடுத்தபடியாக எல்லை மூடல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைப் பல நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன.

எல்லை, பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் வேறு சில நாடுகளில் கிருமித்தொற்று சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

எனவே கிருமித்தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்கும் பொருட்டு அந்நாடுகளில் மீண்டும் எல்லை, பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அந்நாடுகள் பரிசீலித்து வருகின்றன.

ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளைக் காலவரையறையின்றி நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரித்த சுகாதார அமைப்பு, கிருமிப் பரவலைக் கண்டறிந்து அதற்கான சங்கிலிகளை உடைப்பது போன்ற பிற நடவடிக்கைகளுடன் இக்கட்டுப்பாடுகளும் சேர்ந்து செயல்படுத்தப்பட்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியது.

“அனைத்துலக எல்லைகளைத் தொடர்ந்து மூடி வைத்திருப்பது உலகப் பொருளாதாரத்திற்கோ, ஏழை மக்களுக்கோ அல்லது யாருக்குமோ ஏற்றதாக இருக்காது,” என்று சுகாதார அமைப்பின் அவசரக்கால பிரிவின் இயக்குநர் மைக்கேல் ராயன் கூறினார்.

உலகளவில் 16.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், சுமார் 650,000 பேர் மாண்டுவிட்டனர்.