சீனாவில் ஒன்பது நகரங்களில் கொரோனா தொற்று பரவுகிறது

பெய்ஜிங்: சீனாவில் வடகிழக்கு நகரத்தில் உருவான புதிய கிருமித் தொற்று குழுமத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் கொரோனா கிருமித்தொற்று பரவிஉள்ளது.

இதனால் அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் கூறினர்.

கிருமித்தொற்று சீனாவின் வூஹான் நகரில்தான் தொடங்கியது என்றாலும் கடுமையான முடக்க உத்தரவுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் மூலம் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் அண்மைய மாதங்களாக, சில சீன நகரங்களில் அவ்வப்போது சற்று குறைந்த அளவில் மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருவது சீனாவைக் கவலையடையச் செய்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் நேற்று 68 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். அவர்களில் 57 பேர் ஸின்ஜியாங் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆறு பேர் லியோனிங் மாநிலத்தின் டேலியன் நகரத்தைச் சேர்ந்தவர்கள். இதோடு டேலியன் நகரத்தில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

டேலியன் நகரிலிருந்து, தென்கிழக்கு மாநிலமான ஃபுஜியான் உட்பட ஐந்து பிராந்தியங்களில் ஒன்பது நகரங்களுக்குக் கிருமிப் பரவியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, டேலியன் நகர மக்கள் அனைவரும் கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர்கள் கூறினர்.