சமய நிந்தனைக்காக விசாரிக்கப்பட்ட நபரை நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் கைது

பாகிஸ்தானில் சமய நிந்தனை செய்ததாக தாகிர் நசீம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

 மரண தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான சமய நிந்தனை சட்டத்தின்கீழ் நசீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

கடும் எதிர்ப்புகள் இருந்ததால், விசாரணையின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், பெஷாவர் நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்த நபர் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியை எவ்வாறு கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.

நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டவர் அமெரிக்க குடிமகன் என்பதால், அவரின் குடும்பத்திற்கு அமெரிக்க வெறியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது. 

மேலும், அவரை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு சட்டத்தில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.