கோலாலம்பூர்: மலேசியாவை ஆளும் 'பெரிக்காத்தான் நேஷனல்' எனும் தேசிய கூட்டணி முறைப்படி ஓர் அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்தாலும் அந்தக் கூட்டணியில் அம்னோ கட்சி முறைப்படி சேராது என்பதை அம்னோ கட்சியின் தலைவர் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கு மாறாக தமது கட்சி, பாஸ் கட்சியுடனான முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியில் தொடர்வதையே விரும்புகிறது என்றும் தேசிய கூட்டணியில் சேராமல் இருப்பது, அரசாங்கத்துக்குத் தமது கட்சி அளித்து வரும் ஆதரவை மீட்டுக்கொள்ளும் என்று பொருள்படாது என்றும் டாக்டர் ஸாஹிட் நேற்று தெளிவுப்படுத்தினார்.
"தேசிய கூட்டணியிலிருந்து நாங்கள் விலகிக்கொள்கிறோம் எனும் அறிவிப்பு இதுவல்ல. அந்தக் கூட்டணி முறைப்படி பதிவு செய்யப்பட்டாலும் அம்னோ அதில் ஓர் உறுப்பினராக இருக்காது என்பதுதான் எங்கள் முடிவு," என்று அவர் நேற்று கோலாலம்பூரில் உள்ள மத்திய அரசின் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய கூட்டணியில் முறைப்படி சேராதிருப்பதற்கான காரணம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு டாக்டர் ஸாஹிட் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தேசிய கூட்டணி இதுவரை மலேசிய சங்கங்கள் பதிவகத்தில் முறைப்படி ஓர் அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"மத்திய அரசாங்கத்தில் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதர மாநில அரசாங்கங்களில் தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள் எனும் அடிப்படையிலேயே தேசிய கூட்டணிக்கு எங்கள் ஆதரவை நாங்கள் தெரிவித்து வருகிறோம்," என்றும் டாக்டர் ஸாஹிட் அம்னோவின் அறிக்கையை வாசித்தார்.
"அதேவேளையில், முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியில் சேர்ந்துகொள்வது தொடர்பில் பெர்சத்து கட்சி அதனுடன் ஓர் ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ள திட்டமிடுகிறது.
அந்த ஒத்துழைப்பு உடன்பாடு பற்றி தேசிய முன்னணி மற்றும் பாஸ் தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். "தேசிய கூட்டணியின் பிரதான குழு, முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்து சேர்ந்துகொள்வது பற்றி ஆலோசிக்கும்.
"நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய கூட்டணியின் பிரதான குழு, முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியின் பலத்தைக் கூட்டுவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டது," என்றும் டாக்டர் ஸாஹிட் விளக்கினார்.
மேலும், முன்னைய பிரதமர் நஜிப் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பெக்கான் அம்னோ பிரிவு தலைவராகவும் தொடர்ந்து செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
திரு நஜிப்பின் வழக்கு தொடர்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு தெரியும் வரை இவ்விரு பதவிகளையும் திரு நஜிப் தொடர்ந்து வகிப்பார் என்றும் டாக்டர் ஸாஹிட் கூறினார்.

