அமெரிக்கா: இவரை சிறையிலிருந்து வெளியே விட்டால் ஆபத்து

கலிஃபோர்னியாவில் பணியாற்றி வந்த சீன ஆய்வாளரை, உளவாளியைப் போல நடத்தப்படவேண்டிய ராணுவ அதிகாரி எனத் தெரிவித்த அமெரிக்காவின் அரசுதரப்பு வழக்கறிஞர்கள், அவர் பிணையின்றி சிறையில் மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும் என்று  கூறுகின்றனர்.

ஜுவான் டெங் என்ற அந்தப் பெண்ணுக்குப் பிணை வழங்கப்படக் கூடாது என அமெரிக்க நீதிமன்றத்திடம் முறையிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சீன அரசாங்கத்தின் முழு உதவியுடன் அவர் அமெரிக்காவிலிருந்து தப்பிச் செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக  கூறினர்.

டெங் சீனா திரும்பினால் அமெரிக்காவின் பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் சீனாவின் கையில் சேரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 37 வயது டெங் தற்போது அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள சிறையில் உள்ளார்.

தாம் சீனாவின் ராணுவத்தில் பணியாற்றியதை அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து டெங் மறைத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் டெங் தரப்பினரோ, சீன ராணுவம் நடத்திய மருத்துவப் பள்ளியில் படித்திருந்ததாகவும் அவ்வாறு படிப்பது ராணுவத்தில் சேர்ந்ததற்கு ஈடாகாது என்று கூறுகின்றனர்.

இந்த விவகாரம் எப்படி உருவெடுக்கிறது என்பதை சீனா கண்காணித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்தார். இவரது விடுதலைக்காக அமைச்சு இந்த வாரத்தின் முற்பகுதியின்போது குரல் கொடுத்தது.