‘சமூகப் பரவலுக்குக் குழந்தைகள் முக்கிய காரணமாக இருக்கலாம்’

பெரியவர்களைக் காட்டிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுவாசக் குழாயில் கொவிட்-19 மரபணுக்கூறு 10 முதல் 100 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று புதியதோர் ஆய்வு முடிவு கூறுகிறது.

இதனால், சமூகத்தில் கிருமித் தொற்று பரவ சிறுபிள்ளைகள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்காவின் ‘ஜமா பீடியாட்ரிக்ஸ்’ சஞ்சிகையில் வெளியாகி இருக்கும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 23 முதல் ஏப்ரல் 27 வரை, சிகாகோ நகரைச் சேர்ந்த 145 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஐந்து வயது வரை, ஐந்து முதல் 17 வயது வரை, 18 முதல் 65 வயது வரை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

‘ஆன் அண்ட் ராபர்ட் எச்.லியூரி’ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டெய்லர் ஹீல்டு சார்ஜண்ட் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கொரோனா மரபணுப் பொருள் அதிகளவில் இருந்தால் அதிகம் தொற்றக்கூடிய கிருமி தோன்றும் சாத்தியம் இருப்பதும் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு சோதனை ஒன்றின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சிறுபிள்ளைகளை கொரோனா தொற்றவும் அவர்களால் அது பரவவும் வாய்ப்புக் குறைவு எனக் கூறப்பட்டு வந்த நிலையில், புதிய ஆய்வு முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளன.