'கொரோனா கிருமிப் பரவலை தடுக்கும் முக்கிய தருணம் இது'

1 mins read
95382a12-3d79-4774-8026-357447448be4
ஜூலை 31ஆம் தேதி ஹனோய் நகரில் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ள காத்திருந்த குடியிருப்பாளர்கள். படம்: ஏஎஃப்பி -

ஹனோய்: கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய தருணத்தில் வியட்னாம் இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் நியுவென் ஸுவான் ஃபுக் தெரிவித்துள்ளார்.

வியட்னாமின் டானாங் நகரில் உள்ள நான்கு தொழிற்சாலைகளில் அண்மையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது அதிகாரிகளைக் கவலையடையச் செய்துள்ளது. அங்கு சுமார் 3,700 பேர் வேலை செய்கின்றனர்.

இவ்வாண்டு ஜனவரியில் கொரோனா கிருமிப் பரவலை வியட்னாம் கட்டுப்படுத்தியது. அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு மேலாக அந்நாட்டில் சமூக அளவில் கிருமித்தொற்று கண்டறியப்படவில்லை.

ஆனால், இப்போது அந்நாட்டிற்கு மறுபடியும் சவால் எழுந்து உள்ளது. டானாங் நகருடன் தொடர்புடைய புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களை மேலும் பெருகவிடாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

"கிருமி பரவும் மையப் பகுதிகளை அடையாளம் கண்டு நாம் கிருமித்தொற்றை முழுவீச்சுடன் கட்டுப்படுத்த வேண்டும்," என்று அரசாங்க அதிகாரிகளிடம் பிரதமர் நியுவென் கூறியதாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

"கிருமிப் பரவல் பெரிய அளவை எட்டுவதைத் தடுக்க இதுவே சரியான தருணம்," என்றார் திரு நியுவென்.

வியட்னாமின் மக்கள்தொகை 96 மில்லியன். இதுவரை அந்நாட்டில் குறைந்தது 621 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் அறுவர் மரணம் அடைந்தனர்.