உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 700,000ஐ தாண்டியது; 15 நொடிக்கு ஒருவர் மரணம்

அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோ நாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில்,  உலகளவில் கிருமித்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 700,000ஐ தாண்டியது.

கடந்த இரண்டு வார தகவல்களின்படி, ஒவ்வோர் 24 மணி நேரத்திற்கும் சராசரியாக 5,900 பேர் பலியாவதாக ராய்ட்டர்ஸ் கணக்கீடு கூறுகிறது.

அதாவது ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒருவர் மாண்டுபோவதாக கூறுகிறது ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம். 18.4 மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கிருமித்தொற்றின் தற்போதைய மையமாக இருக்கும் அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தடுமாறி வருகின்றன.

உலகின் மற்ற நாடுகளைவிட லத்தீன் அமெரிக்காவில், கொரோனாவின் தாக்கம் தாமதமாகவே தொடங்கியது. என்றாலும் அந்த வட்டாரத்தில் நிலவும் வறுமை மற்றும் நெரிசல் மிக்க நகரங்கள் காரணமாக கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

மேலும் அங்குள்ளவர்களில் பலரும் முறைசாரா துறையில் வேலை செய்கின்றனர். அங்கு சமூகப் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதால் வேகமாக கிருமி பரவுகிறது.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் சேரிப் பகுதிகளில் வசிப்பதாகக் கூறுகிறது ஐநா. 

இன்னொரு பக்கம் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவும் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது.

அமெரிக்காவில் சுமார் 4.85 மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகினர், மாண்டோர் எண்ணிக்கை 160,000ஐ நெருங்குகிறது.

அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஆண்டனி ஃபாசி, இலையுதிர்ப் பருவகால காய்ச்சல் பருவத்திற்கு முன்னர் கொரோனா தொற்றுப் பரவுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதற்கிடையே, கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தோன்றிய சில நாடுகளில், தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போதைக்கு ஓயாது என்பதைக் கூறுவதாக உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon