லெபனானுக்கு சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கம் உதவி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் பாதிப்பை எதிர்கொள்ள அந்நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தின் அவசரகால பதில் நடவடிக்கைக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்க நிதியாக $50,000 வழங்கவுள்ளது. பெய்ரூட் நகரிலுள்ள துறைமுகப் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குறைந்தது 135 பேர் உயிரிழந்ததுடன் 5,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அங்குள்ள நிலைமையைத் தான் அணுக்கமாக கண்காணிப்பதாகக் கூறிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கான தனது ஆதரவை அதிகப்படுத்தும் என்றது.

"லெபனான் மக்களுக்கும் இந்தத் துயரமான சம்பவத்தில் காயமடைந்த அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்," என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரும் தலைமை நிர்வாகியுமான திரு பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.

"கொவிட்-19க்கு எதிராக உலகமே போராடிவரும் இந்நேரம் மிகச் சவாலானது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் ஆயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவச் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது," என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்திற்கு துறைமுகப் பணிமனையில் ஆபத்தான சூழலில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் கூறிவருகின்றனர்.பல்லாண்டுகளுக்கு முன்னதாக உள்நாட்டுப் போரால் உருக்குலைக்கப்பட்ட பெய்ரூட்டில் இந்த அளவுக்கு கடுமையான வெடிப்பு இதுவரை ஏற்படவில்லை.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon