இந்தியாவுக்கு எதிராக செயல்படும் துருக்கி: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள சமூகச் செயல்பாட்டாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்களை இந்தியாவுக்கு எதிராகப் பேசுமாறு துருக்கி அரசு தூண்டி விடுவதாகவும், இதுகுறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசை எச்சரித்துள்ளது என்றும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நோக்கத்துக்காக நாட்டிலுள்ள சில அரசு சார்பற்ற அமைப்புகளுடன் டெல்லியில் உள்ள துருக்கி தூதரகம் இணைந்து செயல்படுவதாக உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது துருக்கி.  இது தொடர்பாக பாகிஸ்தானும் இந்தியாவும்  பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையமாக துருக்கி உருவெடுத்து வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதற்கு என துருக்கி பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது என்றும் அவற்றுள் மாணவர்களைக் கவரக்கூடிய  கல்வி உதவித் தொகை ஒன்று என்றும் தெரியவந்துள்ளது.

“இந்தியாவில் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகள் மூலம் துருக்கியில் கல்வி பயில மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
குறிப்பாக இந்திய காஷ்மீரி மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

“இம்மாணவர்கள் துருக்கி சென்றடைந்த உடனேயே அங்கு செயல்படும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் அம்மாணவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்,” என்று மத்திய உளவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கிறது.

இவ்வாறு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் அமைப்புகளின் பட்டியலை உளவுத்துறை தயாரித்துள்ளது என்றும் இவற்றுள் பெரும்பாலான அமைப்புகள் துருக்கி அரசாங்கம் அல்லது அதிபர் எர்டோகன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon